கடவுளும் Bro வும்


ள்ளிரவில் தனது iphone இல் split screen இல் instaவும் youtubeம் இரைச்சல் போட்டுக்கொண்டிருக்கையில், முரட்டு முழி முழித்தும், கண் மூடி , வாய் பிளந்து உறங்கிப் போனான் ஈதன் ஹன்ட்.பெற்றோர் வைத்த பெயர் “வாங்கருப்பன்”, இவன் தாத்தா மற்றும் குலதெய்வத்தின் பெயர்.

வாங்கருப்பன்,கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு liberal arts இளங்கலை மாணவன். ஆழ்ந்து உறங்கி REM sleep-க்கு தள்ளப்பட்டான்.

“எப்பா! ப்பா! கேக்காத BGM மா இருக்கு? அந்த LED லைட் எல்லாத்தையும் ஆஃப் பண்ணு Bro..யாரு நீ ? மொட்ட மாடில வந்து நின்னுட்டு இருக்க!” என்று கேட்டான் வாங்கருப்பன்

“என்னை அறியாதவன் மூடன், அறிய முயற்சிப்பவன் பக்தன், அறிந்தவன் ஞானி” என்று பதில் வந்தது.

“Lengthy ஸீனா இருக்கு..Bro! என்ன? celebrity யா நீ? “

“நான் கடவுள்! என்னையே அறிமுகப்படுத்த வைத்த முதல் மனிதன் நீ!” என்றதை கேட்டு சில நொடிகள் உறைந்து போனான் வாங்கருப்பன். “கடவுளே! Mass entry bro! என்னா VFX ! ப்ப்பா! Scene பண்ணிட்ட போ! என்ன பாக்க எதுக்கு வந்த bro?ஸாரி..ஸாரி! கடவுள் சார்?”

“Bro என்றே என்னை அழைக்கலாம், நன்றாக இருக்கிறது!” என்றார் கடவுள். “என் கூட எல்லாருமே Set ஆயிடுவாங்கன்னு என் Ex uh சொல்லிட்டே இருப்பா, ஹம்ம்! அத விடுங்க bro!, ஒன்னும் புரியல??!!எதுக்கு உங்க cameo entry Bro?” என்று கேட்டான் வாங்கருப்பன்.

கடவுள் [க] வாங்கருப்பன்[வ]

க : உன் பெயர் என்ன?

வ : நான் எனக்கு வச்ச பேரு ஈதன் ஹன்ட். டாம் க்ரூஸோட stan bro நானு..என் Insta நேமும் அதான்..

க : வாங்கருப்பு!

வ: Bro! தெரிஞ்சிடுச்சா?எங்க அம்மாவ பாத்துட்டு தான் வரியா?

க : இல்லை bro, அனைத்தும் யாம் அறிவோம்

வ : ஹ்ம்ம்! கடவுள் bro, எதுக்கு இந்த மனுசன படச்ச?

க: அத்தனை அனுபவங்களையும் பெற்று இன்புற்றிருக்கவே படைத்தேன்.

வ : தெனமும் சூப்பு வாங்குற கதையா தான் இருக்கு, இதுல எங்க இன்பம்?

க : என் விளையாட்டு! அதுவும் அனுபவம் தானே?

வ : ஓ! அப்டீன்றியா?!

க: உனக்கு என்ன வேண்டும்?

வ: oh! boon? நான் எப்போதும், கூலா, ஹேப்பியா இருக்கனும்.

க : வாய்ப்பில்ல ராஜா!!

வ : ஏன் bro?

க : அது என் லீலை! அதைச் சொல்லிவிட்டால், உன் வாழ்க்கையில் பிறகு Vibeஏ இருக்காது?

வ: Bro! செம்ம! Updated ஆ இருக்க நீ!வ : என்ன மாதிரி, gen Z-களை, எனக்கே ஒரு சில டைம் புடிக்குது, ஒரு சில டைம் புடிக்கல!

கடவுள் புன்னகைத்தார்

வ: என்னா bro?

க: gen Z நாகரீகம், என்னுடைய latest உருட்டு! அ..அ.. படைப்பு!

வ: எனக்கு உன் மேல, அதாவது கடவுள் மேல, பெரிய belief இல்ல, ஆனா bro, இந்த Aura, manifestation, இதுல என்னமோ இருக்கு!

க: You mean you believe that the ” universe is cooking?”

வ: வேற level ! அதே தான்!

க: அந்த “என்னமோ” வ மட்டும் நீ புரிந்து கொண்டால்..

வ: புரிஞ்சவன் பிஸ்தா ன்றியா bro?

க : No cap! Then you will escape the “ brain-rot” of these modern days!

வ: Tough குடுக்குற bro!

கடவுளின் குறுநகை அவனை திகைக்கச் செய்தது.

வ: peace ஏ இல்ல bro, insta reels, x, எத open pannalum, bad vibes ஆ வே இருக்கு, Tik tok ban பண்ணிட்டாங்க! Mine craft, friends hang out, digital fasting, doom scrolling, எந்த vibe ம் செட் ஆகல!

க: தீதும் நன்றும் என்றும் கலந்துதான் இருக்கும் bro! நஞ்சு வந்த பின்பு தான் அமுது வந்தது! நன்மையின் குறைந்த பட்ச நிலையே தீமை என்று புரிந்து கொள். கவலை வேண்டாம் bro!

வ: என்னமோ சொல்ற?

க: முரண்பாடு இல்லையெனில், உலகில் சமநிலை மலராது! Suffering and ecstasy are salt and sugar of life bro!

வ : நல்ல vibe ஆ பேசிட்டு இருந்த, இப்ப என்னாச்சு, bro?

க : Gen Z க்கு புரியும் படி நான் சொல்ல வேண்டும் அல்லவா?

வ: Bro! என்ன தனியா chat பண்ணிட்டு இருக்கீங்க?

க : Bro! உன் friend uh.. bestie ஆ மாறி, bestie…pookie ஆ மாறி, pookie ex ஆ மாறியதில்ல? உன் life ல?

வ: ஆமா! ஆமா! ச்சோ! பழைய memories dig பண்ணாத bro!

க: No , அது போல், life is just a cycle of events and you are just a tool!

வ: Wait? What? Tool?

க: நான் சொன்ன எடுத்துக்காட்டில் friend, bestie, pookie, ex அனைத்தும் ஒரே பெண்தானே,உனக்கு அவள் மேல் உள்ள feelings மட்டும் மாறிக்கொண்டிருந்தது அல்லவா? அது போல் படைத்து, காத்து, அழிப்பவன் எல்லாம் யாமே! நடப்பவை யாவும் ஒன்றே! உன் அனுபவங்கள், உணர்ச்சி வெளிபாடு, நினைவுகள் மட்டும் மாறிக் கொண்டிருக்கின்றன! I mean your reactions, experience and memories!..So you are just a tool!

வ: bro, bro! செம்ம fire bro! வேற மாறி!! Scene பண்ணிட்ட! அப்போ எங்கள வச்சு நல்லா mine craft விளையாடுற? இப்ப தான் slow ah process ஆகுது bro!, நா என் ex ஐ unlearn பண்ணனும், அப்ப தான் என்னோட goals achieve பண்ணலாம், AI product manager ஆகனும், AI ஐ control பண்ணி mass காட்டனும்!

கடவுள் புன்னகைத்தார்

வ: இதுக்கும் சிரிப்புதானா bro? சரி என்னென்னமோ பேசி, என் ex அ remind பண்ணிட்ட bro!, வாங்க bro, உங்க super smile ஓட ஒரு selfie click பண்ணுவோம்.இந்த selfie ய, nano banana ல upload பண்ணி, வித விதமா prompt kuduthu, அந்த pics எல்லாத்தையும் வச்சு, insta ல reels போட்டு தெறிக்க விட போறேன் bro! Sure shot viral bro!

க: இந்த gen Z க்களை, சற்று ஆழமாக பரிசீலனை செய்யாமல் படைத்து விட்டோமோ? இவர்கள் Social media வில் செய்யும் atrocities! அப்பப்பா! தேவியை பார்க்க செல்லும் முன்னரே, ஒரு chat ஐ start செய்து விட்டு, இன்று, coffee table ல், இதை பற்றி தேவியிடம் கலந்துரையாட வேண்டும்.Artificial Intelligence உருவாகும் பொழுதே தேவி கேட்டாள் “இந்த மானுடர்களுக்கு அறிவையும் கொடுத்து அதை மீறும் ஆற்றலையும் கொடுக்கிறீர்களே?!” என்று. “எனது திருவிளையாடலுக்கு ஏது விதிகள்” என்று கெத்தாக கைலாயமே அதிரும் படி சிரித்தேன். “அப்ப புரியல! இப்ப புரியுது! “, “இந்த gen Z யின் கனவில் தோன்றிய சற்று நேரத்தில், என் slang ஏ மாறிவிட்டது! ஹம்! உடனடியாக புறப்படுவோம்!அடுத்து ஒரு நாள் 90s kid ஐ தேர்ந்தெடுப்போம், Poor kids!!”

மறுநாள் காலை ஏழு மணி பத்து நிமிடங்கள், வாங்கருப்பு “iam coming for u my ex!, am coming!” என்று முழுவதும் கலையாத தூக்கத்தில் கூச்சலிட, “ டேய்! வாங்கருப்பு! எரும! எரும! எந்திரிச்சு ready ஆகுடா!” என்று அவன் அம்மா சத்தம் போட்டாள்.

“அம்மா! என்ன ஈதன் ஹண்ட் னு கூப்புடு! Irritating Boomers! அம்மா! என் dreams ல யாரோ ஒரு rock star வந்தாரு, செம்ம mass பண்ணாரு, வேற level மா அந்த bro! Dream full ah process பண்ண time ஆகும், உனக்கு evening சொல்றேன்.”

அவன் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கையில், அவனது smart phone ஒலித்தது! ஓடிச் சென்று பார்த்தான், “Andavar bro calling ” என்று வந்தது, உடனே எடுத்து சிரிப்புடன் “ஆண்டவர் bro, சொல்லுங்க ” என்று சிலவற்றை கேட்டுக் கொண்டு ” Bro! Cool!..Chill bro! Bad vibes ங்கறது ஒன்னும் இல்ல, Good vibes ஓட lowest form தான் bro! இன்னிக்கு செம்ம fire ல இருக்கேன், class ல daily flex பண்ணிட்டு இருக்க அந்த Rocky முன்னாடி full scene பண்றோம் bro!”

Suffering and அ..ஹ…ம்ம்ம்..are salt and sugar bro!, and.. ம்ம்.. reactions..அப்புறம்..அ..ஹ..ம்.. memories bro! நா college வந்து details சொல்றேன், phone சூடாகுது! Fire uh, fire bro! வை bro! நா வரேன் bro! நா வரேன் !

A Few moments later…

கைலாயத்தில்…..

தேவி, சற்று நிறைவு இல்லாத முகத்தோடு கடவுளை நோக்கினார். ” நாதா! தாங்கள் அந்த மானுடனின் கனவில் தோன்றியதற்கு ஏதும் பலன் தெரிகிறதா?”கடவுள் மெளனமாக சிறிது நேரம் கடத்தி தேவியைப் பார்த்து, ” Gen Z க்கள் பிறந்த சூழல் அப்படி, அதி வேகமான இன்றைய உலகத்தில் இவர்களும் வேகமானவர்கள்! They have smart adaptability, என்ன! ஹம்ம்! எல்லாவற்றையும் shorts, reels, story ஆக எதிர்பார்க்கிறார்கள்! அவ்வப்போது கண்காணித்து, தட்டிக் கொடுத்தல் வேண்டும் ! அதை விட்டுவிட்டு, எங்கள் தலைமுறை அப்படி வாழ்ந்தோம், இப்படிச் செய்தோம் என்று flex செய்வதில் என்ன தேவி இருக்கிறது?!”

“Gen Zக்கள், நெருப்போடு விளையாடுபவர்கள் தான், அதே நேரத்தில் அதை கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்கள்! இன்னும் Gen alpha, Gen Betaக்களை நீ அறிகையில் பொறுமை இழப்பாய் தேவி! ஹா, ஹா! தேவி! ஏதோ ” unlearning ” என்று ஒரு context பூலோக உலகில் பிரசித்திபெற்ற ஒன்றாக இருக்கிறது! இன்று , coffee table இல், இதைப் பற்றி விரிவாக கலந்துரையாடுவோம்! நான் unlearn செய்தால் தான், genZ க்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுக்கும்,ஆற்றலுக்கும் ஈடாக tough கொடுத்து என் விளையாட்டை ஆடி தெறிக்க விட முடியும்! ஹா! ஹா!”

வெடித்து சிரித்த பின்பு தேவி சொன்னார் “நன்றாக விளையாடுங்கள் உங்கள் லீலையை!, நாதா! பூலோகம் சென்று வந்த தருணத்தில் இருந்தே,உங்கள் சொற்கள் விந்தையாகவே இருக்கின்றன! என்ன ஆயிற்று?”

“Fire! dude! Fire! .. ஹா! ஹா!..ஹ..ஹ..ஹா!” என்று கடவுள் சிரித்தது கைலாயத்தை அதிர வைத்தது!!

வசந்த் சுகுமார்

Image Source – Gemini

ஒப்பாரி

தவமிருந்து பெத்த மகன் 
தகதகக்கும் தங்கம் அவன்
அன்பா பண்பா இருந்தவன் 
ஊரும் உறவும் மெச்சுனவன் 
களம் பூரா சுத்துனதென்ன - அவன்
காலு ஓடுன ஓட்டமென்ன 
எவன் கண்ணு பட்டுச்சோ 
எம்மகன் புத்தி கெட்டுச்சோ
சினிமா பைத்தியம் புடிச்சுச்சு
சனியன் வேலைய காட்டுச்சு
கண்ணாடி பாத்தே பொழுதுபோச்சு
சோக்கா திரிஞ்சே வயசும்போச்சு
அப்பன ஆத்தாவ ஒதுக்குனான்- கூத்தாடி 
மூஞ்சிய நெஞ்சுல செதுக்குனான்
கலர் படத்துல பாத்தவன 
கடவுள் தான்னு நம்புனான்
பூச என்ன பாட்டு என்ன 
கோசம் என்ன கூட்டம் என்ன

ரசிகன் என்ன தொண்டன் என்ன
கட்சி என்ன மன்றம் என்ன
தலைவா தலைவான்னு கத்துனான்- உசுர 
தரவா தரவான்னு கதறுனான்
அத்து மீறி ஆடுனான்
பித்து ஏறி வாடுனான் 
தூரத்துல இருக்கும் மோகந்தான்னு 
கடந்து விட்டுட்டு போகுந்தான்னு 
நம்பி ஒவ்வொரு கணமும்- என்
பொழுது விடிஞ்சுது தெனமும் 
கூட்டத்துக்கு போனான் முந்தி
இருட்டிட ஓங்குச்சு பீதி- நடு
சாமத்துல சொன்னாங்க சேதி- எம்மகன் 
பிணத்துக்கு இல்லைங்க நாதி! 
எவனுக்கோ மூச்சப் பிடிச்சு கத்துனவன்
எமனுக்கு மூச்ச வித்து கெடக்குறான் 
சொன்னத செஞ்சுட்டு போயிட்டான் 
பெத்தவ நெஞ்சுல தீய மூட்டிட்டான்! 
தவமிருந்து பெத்த மகன்-இப்ப
தணலுருக்கும் தங்கம் அவன்!  

வசந்த் சுகுமார்

பிணங்கள் மீது புழுக்கள் கொண்டது அதீத காதல். அதற்காக அது அங்கீகரிக்கப் பட வேண்டுமா? இந்த நவீன சமூகத்தின் பெரும்பான்மை, பிணங்களையும் புழுக்களையும் அங்கீகரித்து, போற்ற முற்படுகிறது. கொதிநிலையில் நம் மனம். இன்னும் எத்தனை உயிர்களை விழுங்கி தெளிவு பிறக்குமோ?

நிதமும் வாழ்!

நண்பனோடு நாளைக் கடத்து
பகைவனிடம் தோற்று மகிழ்
அம்மாவின் மடியில் அசரு
கடமையைச் சிறிது தவறு
கடவுளிடம் கெஞ்சி நில்
காலனிடம் கபடம் செய்
பிஞ்சிடம் பாசாங்கு பண்ணு
மழலையை மிகைப் படுத்து
பொய் சொல்லி பிதற்று
வாதாடி வற்றிப் போ

மண்ணிடம் மனதாற மன்றாடு
தண்ணீர் எடுத்து முத்தமிடு
மல்லிகைப் பிடித்து மோப்பமிடு
உலகிடம் உன்னை இழந்திடு

தும்பியைத் துரத்திப் பிடி
எறும்பிடம் சாகசம் காட்டு
பட்டமாய் உயரப் பற
பம்பரமாய் சுற்றி விழு
கிணற்றில் கனவு காண்
புல்வெளி போர்த்திப் படு
வெட்டியாய் வெயிலில் திரி
விடியலை மெல்ல ரசி
நிலவிடம் மௌனம் துற
மழையிடம் ரகசியம் சொல்
மேகத்தை எட்டித் தொடு
செடிகொடி ஆரத் தழுவு
குருவியோடு கொஞ்சிப் பாடு
மலர்களை முற்றுகை இடு
கண்ணாடி முன்நின்று பேசு
காகமிடம் பகட்டு செய்
பனியிடம் மனம் உருகு

வான்நோக்கி உரக்கக் கத்து
விண்மீனின் வெட்கம் பார்
வண்ணப்பூச்சி பின் தொடரு

கற்பனைத் தீரக் கிறுக்கு
கவிதையில் மூழ்கி எழு
கனம்தீர கதறி அழு- தாய்
மொழியில் தொலைந்து போ
தனிமையில் புதைந்து மீள்

நித்தமும் புதிதாய் பிற
நேசித்துக் காயப் படு
பித்தனைப் போலச் சிரி
ஆரவாரம் செய்து ஆடு
காதலித்து காற்றில் மித!
வாழும் போதே வாழ்ந்திடு!

மனதார மடிந்து போ!

வசந்த் சுகுமார்







இயற்கை – பகுதி 2

திகட்டா வானம்
தழைக்கும் தரணி
தெரியா எல்லை
துதிக்கும் பறவை
துடிக்கும் சிறகு
துள்ளும் பூச்சி

தவழும் பொழுது
தளரா மாலை
தணிந்த இரவு
தணியா தழல்
தூங்கா விண்மீன்
துயிலும் பனி
தேயா நிலவு
துணிந்த விடியல்

துவளா மலர்
துளிரும் கதிர்
தீண்டும் தென்றல்
தவிக்கும் அரும்பு
தீஞ்சுவை கனி
துளி தேன்

தாலாட்டும் மரம்
தள்ளாடும் இதழ்
தடம்மாறும் ஊற்று
திகைப்பூட்டும் மின்மினி
திசையெங்கும் வானவில்

தேங்கா கானல்நீர்
தொடரும் மலை
தேம்பும் மேகம்
திக்கிடும் மின்னல்
தாளமிடும் இடி

திரண்ட காடு
தெளிந்த அருவி
தழுவும் சாரல்
திமிரும் கடல்
தாவும் அலை
தாளும் புவி
தீராத் தனிமை

போதும் நான் வாழ்வதற்கு!

மிகை தொடரும்...
வசந்த் சுகுமார்

வெட்டியான் பேச்சு

இடுகாடும் எனக்கு வீடுதேன்
சவங்க என்னோட ஒறவுதேன்- நான்
எம்புட்டு பொலம்பல கேட்டவன்-இந்த
வெட்டியான் பொலம்பறேன் கேளுங்களேன்!

“காசு மேல கொள்ள
ஆச எவனுக்கு இல்ல
கலரு நோட்டு ஜோப்புல
பொழுது ஓடும் ஜோருல -ரூவா
கிழிஞ்சா ஒட்டு போடுவான்
கசங்குனா கண்ணு கலங்குவான்
தொலஞ்சா ஒடஞ்சு போவான்- நீ தொலச்சா
ஒன்ன ஒடச்சு போடுவான்

வூடு வாங்க கடனு
கடன தீக்க பவுனு- இப்ப
மவளுக்கு எங்க பொன்னு?
மவனுக்கு எங்க மண்ணு?-மனுசபயலுக
துட்டு இல்லாம மேயிறாக;
வங்கில நின்னா வையிறாக;
ஒறவ கேட்டா பசப்புறாக;-கூட
சுத்துன பயலுக ஏசுறாக

தட்டுல வைக்க காசு- நடு
நெத்தில வைக்க காசு-பொய்ய
கத்தி சொல்ல காசு- சத்தியத்த
பொத்தி வைக்க காசு

பைசா வேணுமுன்னு சொல்லிகிட்டு
ஓடி ஒழச்சான் நொந்துகிட்டு
சோலிக்கு ஏத்த கூலியில்ல
கூலிக்கு மேல நோவுதொல்ல
நோவு போக்க செலவிருக்கு
துட்டு கொஞ்சம் மிஞ்சிருக்கு
பசி என்னவோ எஞ்சிருக்கு
ரூவாக்கு எங்க பதிலிருக்கு

இல்லாத பய ஏங்குறான்- காசு
உள்ளவனோ மேல கேக்குறான்
சவக்குழி நெருங்கையில ஒணருறான்
வெறுங்கையா போவோமுன்னு நடுங்குறான் -பயல
எரிச்ச பொறவும் அடங்குல- சில்லரைக்கும்
சவத்துக்கும் ஒறவும் முடியல
கைய தூக்கி தொளாவுறான்
தடியில ஒன்னுபோட்டா அடங்குறான்

வெட்டியான் பொலம்பறேன் கேளு!

சவத்த பொதச்சும் எரிச்சுந்தேன் - என்
வவுறும் தெனமும் நெறயுந்தேன்-இது
வெட்டியான் பொழப்பு ஆச்சுதேன்- இங்க
எதுக்கும் வேணும் காசுதேன்!

வசந்த் சுகுமார்

தீவிரவாதியின் தீராவியாதி

பிஞ்சிலே நஞ்சு உள்ளம்- இவன்
நெஞ்சிலே வஞ்ச வெள்ளம்- இவன்
ஆறாம் அறிவு அழிந்தொழிய
களையோடுக் கருணையும் அறுத்தெறிந்து
விளையாட்டாய் வன்முறை பழகி
கொலையறுக்கப் பயிற்சி பெற்று
குண்டு வெடித்து மகிழ்ந்து
துப்பாக்கிப் பிடித்துத் துணிந்து
இறை,இனம் பெயர் சொல்லி
மதம்,மண் பெயர் சொல்லி
படையொன்று இங்கு உருவாக்கினான்
அடையாளம் இன்றி வலுவாக்கினான்
கொள்கைத் தரும் போதை- இவனைச்
செய்யத் தூண்டும் வதை
புனிதம் எது? போர் எது?
புனிதப்போர் இவனுக்கு நியதியானது!

இவன் ஆழ்மனது கூச்சலிடும்
"அன்பு என்ன தந்துவிடும்?
அரவணைப்பும் ஆக்கமும் மட்டும்
தீயது எத்தனை அள்ளித்தரும்
திகட்டாத இன்பம் ஈட்டும்
பழிதீர்த்து தாகம் தணிக்கும்
குருதிபார்த்து இதயம் கனியும்
இறைபணி நிறைவு பெறும்
பிறவிப்பயன் பரிசாகக் கிடைக்கும்"

அப்பாவிகள் கொன்று ஆட்சி செய்து
பேடிகள் என்று பெருமிதம் கொண்டு
இவன் அறிவு அனைத்தும் அழிப்பதற்கு மட்டும்
இவன் ஒற்றுமை என்றும் தீவிரவாதத்தில் எட்டும்!

தீவிரவாதிக்கு ஒரு கடிதம்

கருவிலே நற்கதை கேட்டு
ஒழுக்கம் கற்று வளர்ந்து 
உலக அறிவு பெற்று
அறிவோடு வீரமும் வளர்த்து 
கடமைதவறா கல்வி கற்று
தாய்மண் காக்கப் பயின்று

போர்த் தொழில் பழகி 
எந்திரமும் ஏவுகணையும் ஏந்தி
எம்மக்கள் எந்நாடு என
நாட்டுக்குப் பலவீர்கள் என்று
"உலகில் யாவரையும் காப்போம்" என்றோம்
முப்படைகள் நாங்களென முழங்கிச் சொன்னோம்!

வீரம் எனக்குத்தரும் இதம்
உனை வெல்லச்செய்யும் நிதம்
மதம் எது? இனம் எது?
மனிதம் மட்டுமே நியதியானது!
அன்பு அத்தனையும் தரும் 
மண்,மொழி மக்கள் காக்கும்!

உறவினர் அன்பெனக்கு காவல்தெய்வம்
தாய்மண்ணின் மடியெனக்கு ஆலயம்
புவியிருக்கும் வரை புரட்சிசெய்வேன்!
குருதி இழந்தாலும் கொடிகாப்பேன்!
நான் மடிந்து மாய்ந்து போனால்- என்மகன்
மார்தட்டி நிற்பான் போர்க் களத்தில்! 
சாமானியன் இடம் சாகசம் ஏனோ?
அவன் உணர்ச்சிகளின் உருவம் நானோ!
பேடிகளை கொன்று குவித்திடுவேன்- இதை
பெருமிதமாய் உரக்கச் சொல்லிடுவேன்!
தீமை வெல்லும் எனில் நான் எதற்கு இங்கே?
என் ஒவ்வொரு அணுவும் போரிடும் "மனிதம்" காக்கவே!
இவண்
மாவீரன்

வசந்த் சுகுமார்

பொம்மலாட்டம்

சமூகம் கட்டியது நூலொன்று
சமமாய் இறுக்கியதென் கைகால்களை

எகிறியும் ஏங்கியும் பார்த்தேன்!
திமிறியும் துள்ளியும் சோர்ந்தேன்!

அகம் மறைக்க பழகினேன்                                          அழகு பொம்மையாய் ஆடினேன்

விதம்நூறு அழகு ஆடையாம்
வாழ்வொரு நாடக மேடையாம்

காலம்மாற வெவ்வேறு கதாப்பாத்திரம் நான்
காலப்போக்கில் மெருகேறிய முழு எந்திரம்

கைக்கொட்டி சிரித்தார் பலர்
கரமிணைத்து நெகிழ்ந்தார் சிலர்

மர பொம்மைக்கு இங்கேது உணர்வு
மனதின் வெம்மைக்கு இல்லையிங்கு பகிர்வு!

மரபுவழி கலை காத்தல் உலக நியதியோ
மரபிலூறும் இந்த வாழ்முறை தலை விதியோ?

சற்றே நூலவிழ்த்து வேடம் கலைத்து
சாகசமின்றி சாமானியனாய் உயிர்த்து
இயல்பாய் வாழ ஒரு நாள் வருமா? போதுமா?

பழுதடைந்து பயன்முடிந்த பொம்மையென மனம் தளர்ந்து மெய் தொய்ந்து
மௌனமாய் ஆட்டம் முடியுமோ? அடங்குமோ?

வசந்த் சுகுமார்

The purpose of life!

A Midlife Whisper or a Million-Dollar Quest?

A question that either costs a million dollars or is a mundane effect of a midlife crisis — I’m still not sure! It started echoing in my head a few years ago, around the time I noticed my first grey hairs. I dismissed it at first, called it coincidence, only to realize later that it’s a cursed parallel of midlife. But with time, I came to see it for what it truly was: not a passing thought, but a persistent haunting.

A Midlife whisper or a Million-Dollar Quest?

What is the purpose of life?

After an unsystematic, yet relentless, journey to find an answer — through books, people, life experiences, and mostly, through facing myself — I find myself here, not with certainty.

Find the joy in now!

I strive to put these thoughts into writing. It may lack solidity, or it may carry some meaning.

Looking back, I wish this question had come to me earlier, in the days of pitch-black hair and unquenchable curiosity. But for that to happen, certain seeds must be sown early. Influences matter — books that provoke thought, mentors who guide without bias, and environments that encourage seeking — the kind that plants a tiny speckle of wisdom within. The wisdom traditions call this “Gnana Yogam”, the path of knowledge.

Think of Swami Adi Shankara or Swami Vivekananda — people who began the search young, with great clarity of mind.But when those opportunities don’t present themselves early on, and the question arises later in life , triggered by societal pressures or inner echoes — when you’re tangled in the worldly responsibilities of family, children, status, money, and profession, the real struggle begins. You start to peel away the layers, only to realize how many attachments define you, and how few truths you actually stand on. Yet even then, the journey is not too late. In fact, it might be right on time.

So, what have I gathered so far?

“The kind that plants a tiny peckle of wisdom within”

Life is celebration”

Take life as it comes. Experience it consciously. Find joy in the now. There’s a quiet magic in simply being — in showing up to each moment without resistance.

Balancing good and bad stress is a challenge

Purpose is finding your talent and making it your passion!

Find that one thing that makes your heart beat a little faster, while giving you peace — the phenomenon called “good stress” — and stick to it. Even if it leads you through failure, even if you never “succeed” in the worldly sense, it’s worth it. But if failure shakes your belief in it, then it’s worth asking: Am I truly passionate? Besides, balancing good and bad stress is a challenge.

Find that one thing that makes your heart beat a little faster, while giving you peace

Purpose is seeking!

Let your thoughts flow freely. Travel with the question, not for the sake of finding a final answer, but to enjoy the seeking itself. There’s joy in the journey ,sometimes more than in any destination.

Perhaps most importantly, there may never be a final answer!

And perhaps most importantly, there may never be a final answer. And that’s okay. Maybe the purpose of the question is not to stop the asking, but to keep us alive in wonder. Any answer we settle on may soon feel hollow and yes, that’s life’s way of telling us not to hold on too tightly.

So I leave you not with a conclusion, but with a continuation.

There’s joy in the journey, sometimes more than in any destination

Happy living, fellow seekers! If you’ve been on a similar journey, let’s connect

Vasanth Sukumar

(இயற்கை-பகுதி 1)

இயற்கையின் இயக்கம் யாதென அறிய என் வாழ்நாள் போதாதென,
அகத்தில் ஆரவாரமூட்டி ஆகர்ஷிக்க வைத்த இயற்கையிடம்,
மொழிந்து
இசைத்து
முத்தமிட்டு
வாஞ்சை கொண்டு,
புகலிடமாய் என்னை புகுத்த மிகைப்படுத்தி மன்றாடுகிறேன்!

“திகட்டாத உறவுகள்”

“இலைமடி அமர்ந்து         
எடைதனை இழந்து இன்புற பறக்கிறேன்

காற்றோடு ஈரஞ் சுமந்து ஊற்றோடு நேசங் கொண்டு
பெரும்பாறை ஊடுருவி
செம்மண் ஆறத்தழுவி
இலக்கின்றி போகிறேன்

காகம் விரல்பிடித்து பறந்து- தேடித்தீரா
தாகம் உணர்கிறேன்
பறவைக் கூட்டின் நெருடலில் படர நினைக்கிறேன்
குறுங்கதிர் நுனிநீர் 
குலுங்கிச் சிதற
குளிர்மழையில் நனைகிறேன்
சுடுவெயில் கண் சிமிட்டி சுகமாய் உருகும் பனியின் காதல் அறிகிறேன்
சிலந்தி வலை அத்தைமடி                                        சில்லென தென்றலின் தாலாட்டு                                        சில மணி மெல்லுறங்கினேன்

அரும்பு மலருகையில் இரு தேனீக்கள் பேசுகையில் கருவண்டு தேனுறிகையில் பெரும் மௌனம் கலையும் சப்தம் கேட்கிறேன்
களைத்து விழித்து           
குவளைமலர் மணம் ஈர்த்து
களிப்பேறி கவலை மறந்து நடக்கிறேன்

அறுகோண வீட்டில் வாடகையேறி அரசி தேனீ வணங்கி அமிழ் தேன் பருகி மறைபொருளேந்திய நடனத்தில்
மதிமயங்கி மீள்கிறேன்
துடித்து வரும் அலையின் முன்                                       பிடித்து வைத்த மணல்வீட்டில்- தேகம்                                மடித்து இளைப்பாற நினைக்கிறேன்
இரு கையிறுகப் பற்றிய மண்ணின் ஈரம்
இரு உறவுகளுக்கு இதமோ! இந்த நிலமகளுக்கும் அவள் மகன் எனக்கும் தொப்புள் கொடி வரமோ!

மிகை…….தொடரும்

வசந்த் சுகுமார்

உணர்வேனோ?

என்னை பகுத்தறிவது எப்போது? நானின்றி உலகில்லை என்றெண்ணிய மருட்சி

எதைத் தேடி போகின்றேன்?தேடும் பொருளே என்னுள் உள்ளதோ?

இயக்கும் ஆட்சியும் இயங்கும் காட்சியும் ஒன்றோ? மெய்ப்பொருளோ?

மெய் என்னை இத்தனை வருத்தியும் அது பொய்யென உணர மறுப்பேனோ?

வெற்றி, புகழுக்கு அடிமையென பற்றியே வாழ்நாள் மெலியுமோ?

நல்லறிவை கொடுத்த தெய்வம் அதை மீறும் ஆற்றலை எனக்கேன் அளித்தனையோ?

கடந்தவனையும் உள்ளவனையும் என்னுள் உணரத் தவறினேன்

ஆழ்ந்த பொருள் அறிய கற்ப காலம் போதுமா?

பிறந்து பிறவாமையில் முடிவது போல் அனைத்துமறிந்து அறியாமையில் முடியுமோ?

என்னை உணர்ந்து உன்னை உணரவைப்பாயா? உன்னை உணர்ந்து என்னை உணரவைப்பாயா?

தேடலிலே தேய்ந்து மாய்வேனோ? எனைத் தொலைத்தே தெருட்சி பெறுவேனோ!

இமை மூடி தேடுகின்றேன்! வழி பற்றி தொலைய! உன் அடி பற்றி தெளிய!

“நான்” கரைய. “நீ” மலர்வாயோ….? உணர்வேனோ?

வசந்த் நான் பிரம்மம்!!!